பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறதா துருவ நட்சத்திரம்..?

 
1
கவுதம் மேனன் இயக்கி விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.இதையடுத்து, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணத்தை திரும்ப கொடுத்தால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடலாம் என கடந்த நவம்பர் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து பணத்தை திரும்பி செலுத்தாததால் படத்தை இதுவரை வெளியிட முடியவில்லை.இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

From Around the web