'வெச்ச குறியில் இரை விழுந்ததா?! 

 
1

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான படம்  " வேட்டையன்".இந்த படத்தில் அமிதாப், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா என பெரிய லிஸ்ட் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

என்ன கதை?

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., அதியன் ( ரஜினி). கன்னியாகுமரி மாவட்த்தில் உள்ள ரவுடிகளைச் சுட்டுத் தள்ளுகிறார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதியன். இந்நிலையில் அவர் செய்கிற ஒரு என்கவுண்டரில் அப்பாவி ஒருவர் பலியாகி விடுகிறார். இது சம்பந்தமான  வழக்கு மனித உரிமை அதிகாரியும் நீதிபதியுமான சத்ய தேவ் விசாரணை குழுவிடம் வருகிறது. இந்த வழக்கில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. இதை சுவாரஸ்யமான த்ரில்லர், கூர்மையான வசனங்கள், தேர்ந்த நடிகர்களின் உடல்மொழி என்று மெருகேற்றி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். ஆனால் பல இடங்களில் சமூகத்தின் அவலத்தை தோலுரிக்கிறேன், கருத்து சொல்கிறேன் என்று பிரச்சார நெடி தெறிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

கொடுத்த காசுக்கு தியேட்டரில் விசில் சத்தம் ரஜினியின் ஒவ்வொரு அசைவுக்கும் காதைக் கிழிக்கிறது. போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் வித்தியாசத்தையும், நிதானத்தையும் காட்டியிருக்கிறார். அமிதாப் கதாபாத்திரம் கச்சிதம். அப்பாவித்தனமாக வரும் துஷாராவின் நடிப்பு சிறப்பு. பகத் பாசில் கால்ஷீட்டுக்காக 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று என்றார்கள். பகத் பாசிலின் திருடன் வேடத்திற்காக 6 மாதங்கள் காத்திருந்ததில் தேவையில்லை . தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. என்கவுண்டருக்கு எதிரான மஞ்சு வாரியரின் நேர்மை கவர்கிறது. போலீஸ் அதிகாரியாக மிடுக்கான ரித்திகா சிங், மிரட்டலான வில்லனாக ராணா என எல்லோருமே பாஸ் மார்க்கும் அதிகமாகவே வாங்கியிருக்கிறார்கள். 

இயக்குநர் அவருடைய ஸ்டைல் கதையில் ரஜினியைத் திணித்திருக்கிறார். இது ரஜினிக்கான பார்முலா கிடையாது. என்கவுண்டர் கதையில் நீட் தேர்வு குளறுபடிகள், சமூக பிரச்சனைகள் என்று ஒவ்வொரு வசனமும் ஷார்ப்.. ஆனாலும் பல இடங்களில் பிரச்சார நெடி தெறிக்கிறது. அப்புறம் அனிருத் இசை.. படத்தின் கதை இசைக்கு இவ்வளவு தான் இடம் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் ரஜினி படத்தில் எதிர்பார்த்த மாஸ் மிஸ்ஸிங்.

கதைக்கான மெனக்கெடலில் இத்தனை விரிவான ஆராய்ச்சியை ரஜினி படத்தில் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. லாஜிக் மிஸ்ஸிங் பற்றிக் கூட கவலைப்படாத ரசிகர்களை கதைக்காக டீட்டெயில் சொல்றேன் என பொறுமையை சோதிப்பது அயர்ச்சியைத் தருகிறது. 'பாபநாசம்’ படம் போன்று நல்ல த்ரில்லர் கதையில் போலீசாக நடித்திருக்கிறார் ரஜினி. அந்த வகையில் ‘வேட்டையன்’ ஓகே.



 

From Around the web