சுதந்திர போராட்ட தியாகிகளை அவமரியாதை செய்தேனா..? நிரூபித்தால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார்

 
1

பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கங்கனா ரனாவத். இதுவரையில் நான்கு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவருடைய நடிப்பு சாதனைகளைக் கடந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி எப்போதும் பரபரப்பான நபராகவே அறியப்படுகிறது. மராட்டியத்தில் ஆளும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்தார். அதன் காரணமாக, அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தன்னை பாஜக, மோடி ஆதரவாளராக கங்கனா ரனாவத் காட்டிக்கொள்கிறார்.

இந்த நிலையில், ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி’ என்று பேசியிருந்தார். அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்துவருகின்றன. கங்கனா ரானாவத்திற்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள கங்கனா ரனாவத் அதில் கூறியிருப்பதாவது, “அதே பேட்டியில் அனைத்தும் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திர போஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் ஜி போன்ற பெரியவர்களின் தியாகத்துடன் சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் தொடங்கப்பட்டது.

1947-ல் எந்த போர் நடைபெற்றது. யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாக தெரியப்படுத்தினால் எனது பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதோடு மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். ஆகவே, தயவு செய்து இந்த விஷயத்தில் எனக்கு உதவுங்கள்” என்றார்.

From Around the web