கவினுக்காக மிஷ்கின் விட்டுக்கொடுத்த சம்பவம்..!!
 

வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவினுக்கு வேண்டி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் ஒரு நல்ல காரியம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
 
kavin

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்தவர் கவின். அவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அதன்படி நளன் இயக்கும் ஒரு படத்திலும், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் மற்றொரு படத்திலும் கவின் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிலும் ‘பியார் பிரேமா காதல்’ நளன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்துள்ளது. ஆனால் கதையை கேட்டு தனுஷ் ஓகே செய்து வைத்ததோடு சரி, அதற்கு பிறகு அவர் நளன் படத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அவரிடம் இருந்து வெளியேறி, தற்போது அந்த கதையில் நடிப்பதற்கு கவினிடம் பேசி ஓகே வாங்கியுள்ளார் நளன்.

இதற்கிடையில் உன்னாலே உன்னாலே, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்த சதீஷ் இயக்குநராக களமிறங்குகிறார். அந்த படத்தில் கவின் தான் ஹீரோ. முன்னதாக, இப்படத்துக்கு படக்குழு ஒரு டைட்டிலை முடிவு செய்துள்ளது. அதை மிஷ்கின் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்துள்ளார். உடனடியாக இயக்குநர் சதீஷ் மிஷ்கினை சந்தித்துள்ளார்.

அப்போது நடந்த உரையாடலில் கவின் நடிக்கும் படம் என்பதால், மிஷ்கின் அந்த டைட்டிலை சதீஷுக்கு தர சம்மதித்ததாக கூறப்படுகிறது. கவினின் டாடா படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அவருக்காக டைட்டிலை விட்டுக்கொடுப்பதாகவும் சதீஷிடம், மிஷ்கின்  கூறியுள்ளார். இந்த தகவலால் கவின் மிகவும் எமோஷனலாகிவிட்டாராம்.

முன்னதாக கவின் மற்றும் சதீஷ் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தேதிகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், இதனால் அந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தயாரிப்பாளர் டிராப் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது எல்லாமே வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.  இம்மாத இறுதியில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
 

From Around the web