பாலிவுட் சினிமாவில் பில்லா பட இயக்குநருக்கு நடந்த ஏமாற்றம்..!

இயக்குநர் விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் பாலிவுட்டில் தயாராகியுள்ள ‘ஷெர்ஷா’ என்கிற படத்தின் வெளியீட்டு விவகாரம் அவரை கலக்கமடையச் செய்துள்ளது.
தமிழில் குறும்பு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணு வர்த்தன். அதை தொடர்ந்து கவனிக்கத்தக்க பல்வேறு படங்களை அவர் இயக்கியுள்ளார். எனினும், அஜித் கதாநாயகனாக நடித்த ‘பில்லா’ படம் தேசியளவில் அவரை கொண்டு சேர்த்தது.
இதன்மூலம் பல்வேறு பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. மீண்டும் அஜித்தை வைத்து ‘ஆரம்பம்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவர் படம் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது இயக்குநர் விஷ்ணு வர்த்தனுக்கு பாலிவுட்டில் முதல் படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவருக்கு, கொரோனா பெருந்தொற்று பிரச்னையாக அமைந்தது. தொடர்ந்து இரண்டாவது தொற்றின் தாக்கமும் அதிகரித்த சூழலில் ‘ஷெர்ஷா’ படத்தின் திரையரங்க ரிலீஸ் கேள்விக்குறியானது.
தற்போது ‘ஷெர்ஷா’ படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுவிட்டது. இது இயக்குநர் விஷ்ணு வர்த்தனுக்கு கவலையை அளித்துள்ளது. பார்த்து பார்த்து இயக்கிய படம் ஓடிடி-க்கு சென்றதில் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அவர் தமிழ் படங்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.