கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் தடை..!!

 
1

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

1940-களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப் பிரபலமான அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

Dhanush

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இன்று மத்தளம்பாறை பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கிய போது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Dhanush

இந்த படப்பிடிப்பிற்கான உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறையினரிடம் படக்குழுவினர் முறையாக பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குண்டுவெடுப்பு காட்சி படமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மதுரையில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From Around the web