சுயேட்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான், மயில்சாமி பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா..?

 
சுயேட்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான், மயில்சாமி பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா..?

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை தவிர்த்து, திரை பிரபலங்களான மன்சூர் அலிகான் மற்றும் மயில்சாமி இருவரும் போட்டியிட்டனர். அவர்களுடன் வாக்கு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான். சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டார். 

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக-வின் எஸ்.பி. வேலுமணி மற்றும் திமுக-வின் கார்த்திகேய சேனாதிபதி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டார். நேற்று முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 16 சுற்றுகளின் முடிவில் மன்சூர் அலிகான் மொத்தம் 201 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள விபரம் தெரியவந்தது. 

அதேபோல அதிமுக கட்சியில் இருந்து விலகி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி நேற்றைய மாலை 4 மணி முடிவுக்கு 50-க்கும் குறைவான வாக்குகளே அவர் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா வெற்றி பெற்றார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய திரை பிரபலங்கள் பலர் பின்னிடவைச் சந்தித்து தோல்வியை தழுவியுள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கவிஞர் சினேகன், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிடோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மாலை வரை முன்னிலை வகித்து வந்த நடிகர் கமல்ஹாசன் நீண்ட நேர இழுபறிக்கு, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். எனினும், திமுக-வின் இளைஞரணிச் செயலாளராக இருக்கும் நடிகர் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

From Around the web