கடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை- என்ன தெரியுமா..?

 
கடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை- என்ன தெரியுமா..?

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தை இயக்கவிருந்ததும், அது கடைசி வரை நிறைவேறாமல் போனது என தயாரிப்பாளர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் ரூபன், நடிகை இந்துஜா உள்ளிட்டோர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருடைய திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அவருடைய பூத உடல் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலுக்கு விவேக்கின் மூத்த மகள் தேஸ்வினி இறுதிச் சடங்கு செய்தார். அவருடை மறைவு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் இயக்கவிருந்த முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. விவேக் உடலுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு பேசிய படத்தொகுப்பாளர் ரூபன், விவேக் இயக்கவிருந்த படத்தின் முதல் கதையை என்னிடம் கூறினார். ஆனால் இப்போது அவர் கடவுளின் கால்ஷீட்டை பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். கடந்த ஒரு மாத காலமாக எங்கள்‌ சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல்‌ படத்தை இயக்க வேண்டும்‌ என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும்‌ ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும்‌, நடிகர்‌-நடிகைகள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்களின்‌ தேர்வும்‌ நடத்திக்‌ கொண்டிருக்கும்‌ தருவாயில்‌ அவர்‌ மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை இந்துஜா, சென்ற வாரம் கூட அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் கண்டிப்பாக நடிப்பதாகச் சொன்னேன். இந்த வாரம் அது குறித்து சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
 

From Around the web