அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட கிருத்திகா உதயநிதி- ஹீரோ யார் தெரியுமா..??

 
கிருத்திகா உதயநிதி

முதல்வர் ஸ்டாலினின் மருமகளும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்பாக்ஸ் என்கிற மாத இதழை நடத்தி வந்த கிருத்திகா உதயநிதி, சினிமாவில் கால் பதிக்கும் ஆசையில் திரைப்பட இயக்கத்தை கற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ‘மிர்ச்சி’ சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநராக கால்பதித்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு விஜய் ஆண்டனி மற்றும் அஞ்சலி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பெரியளவில் கவனம் பெறவில்லை என்றாலும், கிருத்திகா உதயநிதியை இயக்குநராக ரசிகர்களின் மனதில் நிறுத்தியது.


இந்நிலையில் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஈஸ்ட் ரைஸ் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

பழம்பெரும் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன. கிருத்திகா உதயநிதி இயக்கும் மூன்றாவது படம் தொடர்பான அறிவிப்பு கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

From Around the web