அரசியலுக்கு வர விருப்பமா ? நடிகை ஆண்ட்ரியாவின் பதில் இது தான்..!
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆகி தொடர்ந்து நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து நடைபோட்டு வருகிறார். துவக்க காலத்தில் இவர் நடிப்பில் வெளியான வடசென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. தன்னுடைய அழுத்தமான நடிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றிருந்தார்ஆண்ட்ரியா. பாடகியாகவும் ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல அதிரடி பாடல்களையும் மெலடி பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் சர்வதேச அளவில் பறந்து பறந்து இவர் பாடல்களை பாடி வருகிறார். இந்த இசைக்கச்சேரிகளில் நடனத்துடன் கூடிய இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் சொக்கிப் போகின்றனர். இதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு ஏராளமான ஃபாலோய்களையும் பெற்று வருகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா அழகான பூ போன்ற லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களையும் சந்தித்த ஆண்ட்ரியா, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார். ஆனால் தான் எந்த காலத்திலும் அரசியலில் என்ட்ரி கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஆசைப்பட்டு நடிக்க விரும்பும் கேரக்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா தான் இதுவரை நடித்த படங்களிலேயே ஹாரர், திரில்லர், லவ் ஸ்டோரி என தனது மனதிற்கு நெருக்கமான பல படங்களில் நடித்துள்ளதாகவும் புதிதாக தான் செய்வதற்கு எந்த கேரக்டரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வட சென்னை 2 குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும், வடசென்னை 2 படம் உருவானால் அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும் ஆண்ட்ரியா தொடர்ந்து பேசியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாடலையும் பாடி ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.