யாரும் நம்ப வேண்டாம்... நான் உயிருடன் தான் இருக்கிறேன் - அப்துல் ஹமீது..! 

 
1

இலங்கை வானொலியில் பல ஆண்டுகால நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீது என்பதும் அதன் பின்னர் அவர் சன் டிவியின் பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.

இந்த நிலையில் அப்துல் ஹமீது இறந்து விட்டதாக நேற்று இணையதளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரது தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சற்று முன் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

மாண்டவர் மீண்டு வந்து பேசுகிறேன் என்று நீங்கள் வியந்து பார்க்கலாம், இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் தூங்கவில்லை, எனது மரணம் குறித்து விஷம செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை தொலைபேசியில் அழைத்து எனது குரலை கேட்ட பிறகுதான் நிம்மதி அடைந்தனர். அதிலும் சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு நானும் அழுதுவிட்டேன்.

இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்கள் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவர் இறந்த பிறகு அவர் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் யார் யார் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதை நான் வாழும் காலத்தில் இதை தெரிந்து கொண்டேன்.

எனது மரண செய்தி குறித்து வதந்தி பரப்பியவரை ஏராளமானோர் சாபமிட்டு இருக்கலாம். ஆனால் சாபத்திலிருந்து அந்த மனிதரை காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்த வீடியோவில் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்

ஏற்கனவே அப்துல் ஹமீது இறந்து விட்டதாக மூன்று முறை வதந்தி பரவிய நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் இந்த வதந்தி பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web