மலையாளம் மற்றும் இந்தியில் ஒன்றாக ஆரம்பமாகும் த்ரிஷ்யம் 3 ஷூட்டிங்- ஏன் தெரியுமா..??
விரைவில் துவங்கப்படவுள்ள த்ரிஷ்யம் 3 படத்துக்கான ஷூட்டிங், மலையாளத்துடன் சேர்ந்து இந்தியிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான படம் த்ரிஷ்யம். பிளாக்பாஸ்டர் ஹிட்டடித்த இந்த படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என நாட்டின் அனைத்து பிரதான மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதனுடைய இரண்டாவது பாகம் 2021-ம் ஆண்டு ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியானது. முதல் பாகத்தை விடவும் ல், இரண்டாவது பாகம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இந்த படமும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
ஆனால் தமிழில் வெளியான பதிப்பில் கமல்ஹாசன் தான் செய்த குற்றத்தை முதல் பாகத்தில் ஒப்புக்கொள்வார். அதனால் இரண்டாவது பாகம் எடுக்க முடியாமல் போனது. எனினும் அந்த படத்தை ரீமேக் செய்யச் சொல்லி இன்னும் ரசிகர்கள் கமலை கேட்டு வருகின்றனர்.
த்ரிஷ்யம் கதையால் ஈர்க்கப்பட்ட சீனாவின் பிரபல இயக்குநர், முதல் பாகத்தை சீன மொழியில் ரீமேக் செய்தார். அந்த படமும் பயங்கரமாக ஹிட்டடித்தது. தற்போது சீன மொழியில் இரண்டாவது பாகத்துக்கான ஷூட்டிங் துவங்கவுள்ளது. மேலும் கொரிய மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.
இவ்வாறு உலகளவில் பிரபலமாகிவிட்ட த்ரிஷ்யம் படக்கதையின் மூன்றாவது பாகம் விரைவில் தயாராகிறது. முதல் இரண்டு பாகத்தையும் எழுதி இயக்கிய ஜீத்து ஜோசப் தான், மூன்றாவது பாகத்தையும் இயக்கவுள்ளார்.
முன்கூட்டியே ஸ்பாய்லர்கள் வெளியாவதை தடுக்க, மலையாளம் மற்றும் இந்தியில் ஒரேநேரத்தில் த்ரிஷ்யம் 3 படத்துக்கான ஷூட்டிங் துவங்கப்படுகிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகும். மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் அஜய்தேவ்கனும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.