சீன மொழியை தொடர்ந்து கொரியனில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்..!!

மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மெகா ஹிட்டடித்த த்ரிஷ்யம் படம் கொரியின் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது.
 
drishyam

கேரள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப். இவருடைய இயக்கத்தில் 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில், ரோஷர் பஷீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். 

மலையாளத்தை தொடர்ந்து இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கவுதம் நடிக்க ‘பாபநாசம்’ என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். தமிழ் பதிப்பும் மெகா ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏனைய மொழிகளில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது.

அனைத்து பதிப்புகளும் வசூலைக் வாரி குவித்தன. இதையடுத்து த்ரிஷ்யம் படம் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் வரவேற்பு கிடைத்த நிலையில், 2021-ம் ஆண்டு த்ரிஷ்யம் 2 படத்தை எடுத்தார் ஜீத்து ஜோசப். நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியான இந்த படம் முதல் பாகத்தை விடவும் சிறப்பான வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

த்ரிஷ்யம் 2 தமிழைத் தவிர, கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் த்ரிஷயம் முதல் பாகம் கொரியன் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்நாட்டில் பல ஹிட் படங்களை இயக்கிய கிம் ஜீ வான் இந்த படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிம் ஜீ வான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரியன் நாட்டைச் சேர்ந்த பல படங்கள் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. ஆனால் ஒரு இந்தியப் படம் கொரியன் மொழியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web