திரையரங்குகள் திறப்பு எதிரொலி: தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
தலைவி பட போஸ்டர்

திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதை அடுத்து, தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள படம் தலைவி. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தலைவி படம் வெளியாகவில்லை.

அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத், நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் தலைவி படம் வெளியாகும் என கூறி இருந்தார். தமிழ், இந்தியில் நேரடியாகவும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவிருந்தது.

இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. அதனால் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை எதிர்நோக்கி காத்திருந்த பலரும் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web