அருள்மணி மாரடைப்பால் காலமானார்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

 
1

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள் மணி. சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாகவும் நடித்த இவர், தமிழில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

நடிப்பு மட்டுமன்றி, அ.தி.மு.க.வின் பேச்சாளராகவும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில், வழக்கமான பிரச்சார பணிகளை முடித்து வந்து, சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அருள்மணி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.    

இந்த நிலையில் நடிகர் அருள்மணியின் மறைவுக்கு அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

அ.தி.மு.க. தலைமை கழக நட்சத்திர பேச்சாளராக கட்சியின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர். வரும் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி நடிகர்  அருள்மணி,  தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரப் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கட்சிக்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும். 

அன்புச் சகோதரர் நடிகர்  அருள்மணியை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும்,  திரைப்படத் துறையினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன்  திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

From Around the web