தினமும் காலையில் எழுந்ததும் பிரேம் ஜேக்கபின் காலை தொட்டு...
ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஸ்வாசிகா. அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களால் நினைத்தாலும் கூட மறக்க முடியாது. டிவி சீரியல்களுடன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்வாசிகா. டிவி சீரியல் ஒன்றில் நடித்தபோது தான் ஸ்வாசிகா, பிரேம் ஜேக்கப் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதையடுத்து காதலை வீட்டில் சொல்லி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் நடிக்க வந்துவிட்டார்கள். தினமும் காலையில் எழுந்ததும் பிரேம் ஜேக்கபின் காலை தொட்டு கும்பிடுவேன் என ஸ்வாசிகா அண்மையில் தெரிவித்தார். அதை கேட்ட ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் தன் காதல் மனைவி பற்றி பிரேம் ஜேக்கப் கூறுகையில், காலையில் கண் விழித்ததும் என் காலை தொட்டு கும்பிடுவார் ஸ்வாசிகா. நானும் அவர் காலை தொட்டு கும்பிடுவேன். புது படம் அல்லது விளம்பரத்தில் நடிக்க செல்லும் முன்பு என் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு செல்வார் அவர். படங்களில் பார்ப்பது போன்று தான் எங்கள் வீட்டில் நடக்கிறது. எனக்கு டீ கொடுப்பார், சாப்பாடு பரிமாறுவார். நான் சாப்பிட்ட அதே தட்டில் தான் அவர் சாப்பிடுவார். நான் தட்டை கழுவி வைத்துவிட்டால் கோபப்படுவார். காலையில் நான் செய்தித்தாள் படிக்கும்போது காபி கொண்டு வந்து கொடுப்பார். சமையல் அறைக்குள் என்னை விடாமல் எல்லா வேலையும் அவரே செய்வார் என்றார்.
ஸ்வாசிகா கூறுகையில், நானும் உன் காலை தொட்டு கும்பிடுவேன் என அவர் சொன்னபோது ஜோக்கடிக்கிறார் என நினைத்தேன். ஆனால் திருமணமான நாளில் இருந்து என் காலை தொட்டு கும்பிடுகிறார் என்றார்.