பிரபல நடிகை காணவில்லை..? சினிமா நிறுவனம் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சுனைனா. இவர், 2006-ல் வெளியான ‘சம்திங் ஸ்பெசல்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், தமிழில் 2008-ல் நகுல் நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், சில்லுகருப்பட்டி மற்றும் லத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அயிரா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், டொமின் டிசில்வா இயக்கத்தில் ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய 4 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் நடிகை சுனைனாவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றும் வைரலானது.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நடிகை சுனைனா ஐந்து நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை தனது தோழிகளுடன் கண்டுகளித்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் பின்பு சமூக வலைதளத்தில் அவர் எந்தவித பதிவும் போடவில்லை. நடிகை சுனைனா காணாமல் போனதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சென்னை போலீசார் அவர் கடைசியாக எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக அவர், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வளசரவாக்கத்தில் முன்பு அவர் தங்கி இருந்த வீட்டு மற்றும் அவர் நடித்த பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அவரது தொடர்பு எண் மற்றும் தற்போது எங்கு தங்கி உள்ளார் போன்ற விவரங்களை இரண்டு நாட்களாக போலீசார் தேடிவருகின்றனர். இதற்கிடையே நடிகை காணாமல் போனதாக வெளியான வீடியோ அவர் நடிப்பில் வெளிவர உள்ள ரெஜினா என்கிற திரைப்படத்திற்கான பட ப்ரமோஷன் என்பது தெரியவந்துள்ளது.
ஒரு படத்தை விளம்பரப் படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாளுவது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்று. ஆனால் ஒரு நடிகை காணவில்லை என வீடியோ தயாரித்து அதை உண்மை போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த வீடியோ உண்மை என நம்பி ரெஸ்க்யூ சுனைனா என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனதால் போலீசார் விசாரணை நடத்தும் அளவிற்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.