பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்..!

 
பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்..!

தமிழில் கவனிக்கத்தக்க படங்களில் நடித்து பிரபலமடைந்த மூத்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84

சினிமா துறையினரால் செல்லதுரை ஐயா என்று அழைப்பட்ட இவர் தெறி படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் கவனம் பெற்றார். அதை தொடர்ந்து மாரி, கத்தி, அறம், நட்பே துணை போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். சோகம் பாய்ந்த அவருடைய கண்களும், எதார்த்தமான அவருடைய நடிப்பும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் பல்வேறு படங்களில் மிகவும் எளிமையான மனிதராகவே அவர் நடித்தார்.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் அவருடைய வீட்டு கழிப்பறையில் சுயநினைவின்றி நடிகர் செல்லதுரை விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அதை பார்த்த குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நடிகர் செல்லதுரைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.  முன்னதாக தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சுயநினைவின்றி கிடந்தபோது அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்தார்.

அதேபோல நடிகர் விவேக் தன்னுடைய விருகம்பாக்கம் வீட்டில் சுயநினைவின்றி படுக்கையில் கிடந்தார். அவரை மீட்டு  வடபழனியிலுள்ள பிரபல மருத்துவமனையில் குடும்பத்தார் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி காலமானார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார்.

தொடர்ந்து திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பலரையும் சோகமடையச் செய்துள்ளது. குணச்சித்திர நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web