பிரபல கிதார் வாசிப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜீ.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு கிதார் கருவிகளை வாசித்து வந்தவர் ஸ்டீவ் வாட்ஸ். அவர் கடந்த 23-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இவர் கிதார் வாசித்த படம் மற்றும் பாடல்களில் வாரணம் ஆயிரம் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை”, போடா போடி படத்தில் “போடா போடி” போன்ற பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இவர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான ‘உப்புக்கருவாடு’ என்கிற படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மிகவும் சிறு வயதிலே சினிமாவுக்கு வந்துவிட்டார் ஸ்வீட் வாட்ஸ். இளையராஜா, சிவமணி போன்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றியுள்ளார். திரையிசை பாடல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்கள், மேடை நிகழ்ச்சிகளில் போன்றவற்றிலும் கிதார் வாசித்துள்ளார்.
வெறும் 43 வயதாகும் கிதார் வாசிப்பாளர் ஸ்டீவ் வாட்ஸின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அவருடைய மரணம் இயற்கையாக இருந்தாலும், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும் ஸ்டீவ் வாட்ஸின் மரணம் இசைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.