ஆஸ்கர் வரை சென்ற பிரபல இந்திய நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு..!

 
ஆஸ்கர் வரை சென்ற பிரபல இந்திய நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு..!

இந்திய சினிமா முழுவதும் கொண்டாடப்பட்டு ஆஸ்கர் விருது வரை சென்ற கோர்ட் படத்தில் நடித்த பிரபல நடிகர் வீர சதிதார் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட இரண்டாவது அலை வீரியம் மிகுந்ததாக உள்ளது. தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியளவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக மும்பை நகரத்தின் நிலை பரிதாபமாக உள்ளது. மாநில சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

கொரோனா தொற்றுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் குணமடைந்துவிட்டனர். ஒருசிலர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமூக ஆர்வலரும், எழுத்தாளரும் நடிகருமான வீர சதிதார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2014-ம் ஆண்டு சைத்தன்யா தம்ஹானே இயக்கத்தில் வெளியான கோர்ட் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார் வீர சதிதார். இந்த படத்திற்கு தேசியளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அந்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பில் கோர்ட் படம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இறுதிப் பட்டியலில் இடம்பெறாமல் போனது.

ஆனால் மத்திய அரசு 62-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘கோர்ட்’ படத்தை தேசியளவில் சிறந்த படமாக அறிவித்தது. அதை தொடர்ந்து 71வது வெனீஸ் திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டது. இதுதவிர உலகளவில் நடத்தப்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று கோர்ட் படம் இந்தியாவுக்கு சிறப்பு செய்தது. இதனால் நடிகர் வீர சதிதாரின் மறைவு உலக சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web