பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் பலி; சோகத்தில் மூழ்கிய பிரேசில்!

 
1

பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா (வயது 26). 2019-ம் ஆண்டின் லத்தீன் கிராமி விருது பெற்றவர். செர்டனேஜோ என்று அழைக்கப்படுகிற பிரேசிலிய நாட்டுப்புற இசையில் மிகப் பெரிய பெயர்களில் ஒன்றாக இவரது பெயர் திகழ்ந்தது. இளம் வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். அவர் நாட்டின் துன்பங்களின் ராணி என்று அழைக்கப்பட்டார். தனது வாழ்வை தோற்றுப்போன பெண்களின் அனுபவங்களில் கவனம் செலுத்துவதில் அர்ப்பணித்து மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இவரது கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் ஆன்லைன் இசை கச்சேரிகளில் பங்கேற்றார். அவற்றில் ஒன்று, யூ டியூப்பில் 33 லட்சம் பேரால் உலகம் முழுக்க கண்டுகளிக்கப்பட்டது. இதுதான் உலகளவில் நேரலையில் அதிகம்பேரால் யூடியூப்பில் கண்டு ரசிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்கிறார்கள். கடந்த ஆண்டில் அந்த நாட்டிலேயே அதிகளவில் கவனிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி இவருடையதுதான்.

இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற இடத்தில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்கு விமானத்தில் பயணம் ஆனார். அந்த விமானத்தில் அவரும், அவருடைய சித்தப்பாவும், தயாரிப்பாளரும், விமான சிப்பந்திகள் 2 பேரும் பயணம் செய்தார்கள். ஆனால் கரட்டிங்கா என்ற அந்த இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ. முன்னதாக அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அனைவரும் கூண்டோடு பலியாகி விட்டனர். விமானததில் ஏறுவதற்கு தயார் நிலையில் இருந்தபோது அவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அவர் விபத்தில் மரணம் அடையவில்லை என்றே முதலில் அவரது ஊழியர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் பின்னர் அவரது விமானத்தின் சிதைவுகள், மலைப்பகுதியில் உள்ள ஒரு அருவி அருகே கிடந்தது டெலிவிஷனில் வெளியாகி, அவரது பலி உறுதியானது.

வாழ்ந்து இன்னும் ஆயிரமாயிரம் சாதனைகளை நிகழ்த்தி இருக்க வேண்டிய பாடகி மரிலியா, அநியாயமாக விமான விபத்தில் பலியாகி இருப்பது, பிரேசில் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவரது மறைவுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “பாடகி மரிலியா விமான விபத்தில் பலியாகி இருப்பது நாட்டையே மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது” என கூறியுள்ளார்.

ரியோ டி ஜெனீரோ மாகாண கவர்னர் கிளாடியோ காஸ்டிரோ, “பாடகி மரிலியா இழப்பு, சோகமான விபத்து” என கூறியுள்ளார்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார்,“நான் நம்ப மாட்டேன். என்னால் நம்பவும் முடியாது” என்று உருகி உள்ளார். மினாஸ்ஜெரைஸ் மாகாண போலீஸ் துறை தலைவர் இவான் லோப்ஸ் சேல்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இந்த விமான விபத்துக்கான காரணத்தை தீர்மானிக்க தாமதம் ஆகி இருக்கிறது. ஆனால் சிதறிய விமானத்தின் சிதைவுகள், அந்த விமானம் விழுவதற்கு முன்னால் ஏதோ ஒன்றின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம்” என தெரிவித்தார்.

ஆனால் அந்த விமானம், மின்நிறுவனம் ஒன்றின் கோபுரத்தில் உள்ள வயரில் மோதித்தான் விபத்துக்குள்ளாகி இருப்பதாக மினாஸ் ஜெரைஸ் மின்நிறுவனம் கூறி இருக்கிறது.

மறைந்த பாடகி மரிலியாவுக்கு 2 வயதான லியோ என்ற ஆண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை தாயின்றி தவிப்பது நெஞ்சை நொறுக்கும் சோகமாக அமைந்துள்ளது.

From Around the web