ரசிகர்கள் அதிர்ச்சி..! பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டம்..?

 
1

பாலிவுட் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவரை மகாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தாக நேற்று தகவல் வெளியானது. மகாராஷ்டிராவின் பன்வெல்லில் சல்மான் கானுக்கு பண்ணை வீடு இருக்கும் நிலையில், அங்கு வைத்து அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இப்போது சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோ கேங் இதன் பின்னணியில் இருந்துள்ளது. சல்மான் கான் வெளியே வரும் போது அவரது காரை வழிமறித்து, ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது. இதற்காக சல்மான் கானின் பண்ணை வீடு, அவரது ஷூட்டிங் நடக்கும் இடங்களில் சுற்றி நோட்டமிட்டும் வந்துள்ளனர். சல்மான் கார் வெளியே வந்தபோது அவரது காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுவது மட்டுமின்றி.. ஆயுதங்களைக் கொண்டும் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அஜய் காஷ்யப் என்ற தனஞ்சய் தப்சிங், நஹ்வி என்கிற கௌரவ் பாட்டியா, வாசிம் சிக்னா என்ற வாஸ்பி கான் மற்றும் ஜாவேத் கான் என்கிற ரிஸ்வான் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையே சல்மான் கொலை பிளான் தொடர்பாக சில பகிர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சர்வதேச நெட்வோர்க் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது கைது செய்யப்பட்ட அஜய் காஷ்யப், பாகிஸ்தானின் டோகா என்ற ஆயுத வியாபாரியைத் தொடர்பு கொண்டு துப்பாக்கிகளை வாங்க முயன்றுள்ளார். M16, AK-47 மற்றும் AK-92 ரகத் துப்பாக்கிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், இதற்காக அவர்கள் 60 முதல் 70 நபர்களின் உதவியைப் பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன வேலையை மட்டும் கொடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு முழு பிளான் என்ன என்பதே தெரியாதாம். அதேபோல சில காரணங்களுக்காகச் சிறுவர்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்துவதே இவர்கள் திட்டமாக இருந்துள்ளது. மேலும், சல்மான் கானை கொலை செய்த உடன் கனடாவில் இருந்து நிதியைப் பெற்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சல்மான் கான் போன்ற பிரபலத்தைக் கொன்றவுடன் தேடுதல் வேட்டை தீவிரமாக இருக்கும் என்பதால் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உடனடியாக கன்னியாகுமரிக்குத் தப்பிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாம். கனடாவைச் சேர்ந்த அன்மோல் பிஷ்னோய் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இப்படிப் பல மாநிலங்கள், பல நாடுகளைக் கடந்து நீள்கிறது சல்மான் கானை கொலை செய்யும் பிளான். இதைச் சரியான நேரத்தில் மகாராஷ்டிர போலீசார் முறியடித்து, குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், சல்மானை எதற்காகக் கொல்ல இவர்கள் சதி செய்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தான் சல்மான் கானின் மும்பையின் பாந்த்ரா வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்திருந்தது. இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதன் பின்னணியிலும் லாரன்ஸ் பிஷ்னோயின் கேங் தான் ஈடுபட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.

From Around the web