இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது..!
சென்னை, கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ் அயனம்பாக்கத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த (28) வயது உடைய பெண் ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் கடந்த மே மாதம் 13ம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கெடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்தார். இதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்ததாகவும் தனது புகாரில் இந்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் கருக்கலைப்பு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி தன்னிடம் இருந்து ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, இளம் பெண் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.