ஜூலையில் வெளியாகிறது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..?

 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ‘தளபதி 65’ படத்தின் போஸ்டரே வெளியாகிவிட்ட நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து கேட்பவர்களுக்கு இதோ வெளியாகியுள்ள புது அப்டேட்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. அஜித் ரசிகர்களை கடந்து பல்வேறு தரப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது.

படத்தின் பெயர் ‘வலிமை’ தானா என்பதை படக்குழு இன்னும் உறுதிக்கூட செய்யவில்லை. படம் தொடர்பான ஒரு போஸ்டர் கூட இதுவரை வெளியாகவில்லை. ஆனால் படப்பிடிப்பு பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

ஆனால் கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மீண்டும் துவங்கப்படுவதற்கான வாய்ப்புகள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி நடித்துள்ளார்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறும் என முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன. அதேபோல படத்தின் முதல் பார்வை போஸ்டரை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
 

From Around the web