திருமணம் செய்யாமல் ஏமாற்றும் முன்னாள் அமைச்சர்- பிரபல நடிகை புகார்..!

 
அமைச்சர் மணிகண்டன்

தன்னை திருமணம் செய்வதாக கூறி முன்னாள் அமைச்சர் ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாந்தினி புகைப்பட ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மருத்துவர் மணிகண்டன். அந்த சமயத்தில் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கேபிள் டிவி நிறுவனம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அமைச்சர் பதவியை இழந்தார் மணிகண்டன். அதனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் இவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் நாடோடிகள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாந்தினி என்பவர், மருத்துவர் மணிகண்டன் தன்னை திருமண ஆசைக்காடி 5 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு தற்போது ஏமாற்றுவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகை சாந்தினி புகைப்பட ஆதாரங்களுடன் மருத்துவர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை சந்திக்க மணிகண்டன் பலமுறை முயற்சி செய்தார். அப்போது நான் சம்மதிக்கவில்லை. அவருடைய நீண்ட முயற்சிக்கும் பிறகு நாங்கள் இருவரும் சந்தித்தோம்”.

மலேசியாவில் வணிகம் தொடங்குவது தொடர்பாக எங்களுடைய முதல் சந்திப்பு அமைந்தது. அதை தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டோம். அதன்மூலம் நாளிடைவில் நண்பர்களாக பழகினோம். அது காதலாக மாறியது. மனைவியிடம் பிரச்னை இருப்பதாக கூறிவிட்டு மணிகண்டன் என்னுடன் வாழ ஆரம்பித்தார். திருமணம் செய்துகொள்ள உறுதி அளித்ததால் நானும் அவருடன் வாழ்ந்தேன்.

அப்போது நான் கர்ப்பம் அடைந்தேன். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கூறி சென்னையில் தெரிந்த மருத்துவரை வைத்து எனக்கு கருக்கலைப்பு செய்தார். இதற்கிடையில் அவருடைய அமைச்சர் பதவி பறிபோனது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறினார்.

இதனால் அச்சுறுத்தப்பட்ட நான் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இதுவரை எந்தவித மறுமொழியும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web