பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள்..!!

 
1

அசரடிக்கும் அழகு, வெளிப்படையான வாழ்க்கை, தொட்டதெல்லாம் ஹிட் என ஊரே வியக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். "The empowered woman is powerful beyond measure and beautiful beyond description" என எழுத்தாளர் Steve Maraboli  கூறுவார். இந்த வாக்கியத்திற்கு கச்சிதமாக பொறுந்தும் ஆளுமையாக வளர்ந்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 

தமிழ் சினிமாவில் நயன்தாரா அறிமுகமான வருடம் 2005. 2 கே கிட்ஸ்கள் தவழ்ந்து கொண்டிருந்த காலம் அது. ஆனால் அவர்களும் இன்று நயன்தாராவை 'தலைவி' என கொண்டாடி வருகின்றனர். தொடக்கம் முதலே வெற்றி, வரவேற்பெல்லாம் நயன்தாரா பெற்றுவிடவில்லை. நூற்றில் ஒரு நடிகை என தொடங்கி லேடி சூப்பர் ஸ்டார் என்ற இந்த பயணத்தில் அத்தனை கசப்புகள் இருக்கின்றன.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ஹாப்பி பேர்த்டே நயன்தாரா

ஐயா படத்தில் வந்த கொழுக்மொழுக் நயன்தாராவை பலருக்கு பிடித்திருந்தது. அவர்கள் இன்றும் அவர் ரசிகர்களாக இருக்கின்றனர். என்ன இருந்தாலும் அப்போ எல்லாம் நயன்தாரா எவ்வளவு அழகு தெரியுமா என புலம்பி கொண்டு இருக்கும் சீனியர்களுக்கு மத்தியில்... அவ ஷேப்பு அடடா என வால்பேப்பர்களில் நயன்தாராவை வைத்துக்கொண்டு சுற்றுகின்றனர் ஜூனியர்கள். 

18 வருடமாக ஒரு நடிகை ஹீரோயினாகவே இருப்பதில் எத்தனை போராட்டங்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள சினிமா துறையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தற்போது தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகருக்கு அக்காவாக நடிப்பவர் அவரை விட வயதில் குறைந்தவராக இருக்கும் நம் சினிமாவில் நிலையும் இருக்கிறது. இந்த நிலையை ஒரு சில நடிகைகளே உடைத்தெறிந்து நிலைத்து நிற்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் நயன்தாரா மிக முக்கியமானவர். 

ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று அப்போது இணையத்தில் அதிகமாக சுற்றியது. அதில் கதறி அழுவார் நயன்தாரா. திருமணம் செய்து கொண்டு அவர் சினிமாவை விட்டே விலகி இருக்க போகிறார் என்று அப்போது செய்திகள் வந்தன. ஏதோ காரணத்தால் திருமணம் நடக்கவில்லை. இருந்தும் தமிழ் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் வரை விலகியே இருந்தார் நயன்தாரா.

பின் 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ம் தேதி வெளியானது ராஜா ராணி படத்தின் டிரைலர். ஜானை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் ரெஜினாவை டிரைலரில் பார்த்ததும் மீண்டும் உயிர்தெழுந்தது நயன்தாரா ஆர்மி. நயன்தாரா முன்பிருந்தே அழுகு தான் ஆனால் அந்த படத்தில் இன்னும்... இன்னும் அழுகாகி இருந்தார். அட்லீ இன்னும் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்தாலும் நயன்தாராவுக்கு ராஜா ராணி போன்ற ஒரு கம்பேக் படம் கொடுத்தது தான் அவரை கொண்டாட சரியான காரணமாக இருக்கும். 

அழகு மட்டும் இன்றி நடிப்பிலும் செமயாக மெருகேறி இருந்தார் நயன். அப்போதில் இருந்து அவர் வயது ரிவேர்ஸ் கியரில் பயணிக்க தொடங்கியது. ராஜா ராணி நயன்தாராவையும்... கோகோ பட நயன்தாராவையும் ஒப்பிட்டால் கோலமாவு கோகிலா ஜானின் மனைவி ரெஜினாவின் குட்டி தங்கை போல இருப்பார். எப்போ திரும்ப அவரை திரையில் பார்ப்பது என்று காத்திருந்த ரசிகர்கள் அந்த படத்திற்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்து அழகு பார்த்தனர். 

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ஹாப்பி பேர்த்டே நயன்தாரா

2015ம் ஆண்டு, தான் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை உறக்க சொல்லும் விதத்தில் தனி ஒருவன், நானும் ரவுடி தான் என தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அதிலும் நானும் ரவுடி தான் படத்தில் வரும் 'காது ம்மா' இன்றளவும் ரசிகர்கள் மனதை ஆள்கிறார். நயன்தாராவின் தீவிர ரசிகரால் மட்டுமே அவரை அப்படி அழகாக காட்ட முடியும். அந்த படத்தில் நயன்தாராவின் அழகை ரசித்து ரசித்து ஒவ்வொரு சீனையும் எழுதி இருப்பார் விக்னேஷ் சிவன். அந்த வருடத்திற்கு பிறகு மாஸ் அந்தஸ்த்தை பெற்றார் நயன். 

நயன்தாரா ஒரு பெர்ஃபக்‌ஷனிஸ்ட் என்பதை காட்டும் வகையில் 2016 ஆண்டு வெளியாகின இருமுகன் மற்றும் காஷ்மோரா படங்கள். இதே ஆண்டில் செம எதிர்பார்ப்பில் வெளியான படம் 'இது நம்ம் ஆளு'. படத்தின் ஒன்லைனை விட சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்கிறார்கள்... அந்த படத்தில் அவர்களுக்கு கல்யாணம் நடக்குது என்ற சினாப்சிஸ் தான் அந்த படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது. 

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ஹாப்பி பேர்த்டே நயன்தாரா

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சிக்சர் அடித்த நயன்தாராவின் அறம் படம் வெளியான போது மிக பெரிய ஆளுமையாக உருவாகி இருந்தார். கோபி நாயினார் தனது இரண்டாவது படத்தை தொடங்க இன்றும் பல தொந்தரவுகளை சந்தித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர் தனது முதல் படத்திலேயே அழுத்தமான செய்தியுடன் மிக பெரிய வெற்றியையும் கொடுக்க பெருந்துணையாக இருந்தவர் நயன்தாரா. அந்த படம் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் வெளிவர காரணம் நயன்தாராவின் ஆளுமை. அந்த படத்தின் இறுதியில் மதிவதனி எனும் நான்... என சிஎம்மாகும் காட்சி இருக்கும். அதனை பார்த்து விட்டு வந்த பூரிப்பில் #NayantharaforCM என்ற ஹேஷ்டேக்குகளை பறக்கவிட்டனர் ரசிகர்கள்.

சிங்கிள் லேடியாக திரையில் கெத்து காட்டிய நயன்தாராவுக்கு ரோகினி தியேட்டர் வாசலில் பேனர்கள் வைக்கப்பட்டன. பால் அபிஷேகங்கள் நடந்தது. ஒரு நிமிடம் பெரிய நடிகர்களுக்கு தலை சுற்றி போயிருக்கும் அதையெல்லாம் பார்க்கும் போது. சினிமாவில் தனக்கு புகழ் கிடைப்பதோடு இருந்து விடாமல்... கிடைத்தவற்றை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பதையும் செய்து வருகிறார் நயன்தாரா. வெறும் நிதியாக மட்டும் இல்லாமல் சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதும் அதில் அடக்கம். 

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ஹாப்பி பேர்த்டே நயன்தாரா

வெறும் சினிமாவும் நடிப்பும மட்டுமே நயன்தாராவை ஒரு ஆளுமையாக மாற்றிவிடவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அதற்கு காரணம். இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நடிகையை பற்றி கொச்சையாக பேச ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது. என் தலைவி எவ்வளவு கஷ்டத்துக்கு பிறகு இப்படி டாப்ல இருக்காங்க தெரியுமா என கொண்டாட அதனை விடவும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவனோடு விருது மேடைகளில் தோன்றுகிறார் நயன். தனக்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் விக்னேஷோடு சென்று Couple goals உருவாக்கி வருகிறார். 

தங்களுக்கு நிச்சயதர்த்தம் முடிந்துவிட்டதாக சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் நயன்தாரா.

எத்தனை பிரச்னைகளை சந்தித்தாலும், அதை துணிச்சலுடன் எதிர் கொண்டு, தனது படங்களின் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நயன், பல பெண்களுக்கு முன்னுதாரணம். 

#HBDLadySuperStarNayanthara

From Around the web