எந்த நேரத்திலும் நான் கொல்லப்படலாம்: இயக்குநர் கோபி நயினார் சொன்ன அதிர்ச்சி தகவல்..!  

 
1

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் ஆனது. இதையடுத்து, பெரியாரிஸ்டுகள் பலர் தன்னை மிரட்டி வருவதாக இயக்குநர் கோபி நயினார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், தான் எதிர்காலத்தில் கொல்லப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது:-

தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும், அவர்களின் வாழ் நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஐனநாயக அமைப்பு என்று கூறுக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது

தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு, திராவிட சித்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. இந்த சூழலில் கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அந்த படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும்போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராடவிட கழகம், நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது இதுபோன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்துக்காக திராடவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்த வரும் நிலையில், பெரியார் மற்றும் திராவிடம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடப்பதாக கோபி நயினார் பேசிய வீடியோவை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் கோபி நயினார், “கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் அறிவியலா? மண்ணை அள்ளக்கூடாது என்று சொல்வது அறிவியல் இல்லையா? கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் பகுத்தறிவா? இயற்கை வளங்களைச் சூறையாடக்கூடாது என்று சொல்வது பகுத்தறிவு இல்லையா?

நீ ஒரு பகுத்தறிவாளனென்றால், இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு எதிராகப் பேசுகிற என் போன்றவர்களை, ‘உன்னைப் போன்றவர்கள்தான் அரசுக்குத் தேவை’ எனக் கூறி, அரவணைத்துக் கொள்ள வேண்டுமா? வழக்குப் போட்டு அச்சுறுத்த வேண்டுமா?

அப்படியென்றால், நீ யாராக இருக்கிறாய்? திராவிடமெனும் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறாய். அவன் சனாதனம் எனும் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறான். சர்வாதிகாரம் எதன் பெயரில் இருந்தாலென்ன? சர்வாதிகாரம் சர்வாதிகாரம்தானே.

சனாதனத்தின் சர்வாதிகாரத்தை விட, திராடவிடத்தின் சர்வாதிகாரம் மிக கொடூரமாக இருக்கும். ஏனென்றால் என் எதிரி சண்டையிடும் போது, என்னையும் அவன் கொல்வான், அவனையும் நான் கொல்வேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் என தோழன் என்னிடம் சண்டையிடும்போது அவனை எதிர்த்து தாக்குவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒரு நல்ல பெரியாரிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

From Around the web