”உன்னை எப்போதும் மிஸ் செய்வேன் ஷிவாங்கி” அஸ்வின் உருக்கம்..!

 
”உன்னை எப்போதும் மிஸ் செய்வேன் ஷிவாங்கி” அஸ்வின் உருக்கம்..!

குக் வித் கோமாளி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, நிகழ்ச்சிக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஷிவாங்கியை மிஸ் செய்யப்போவதாக கூறி சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் அஸ்வின்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதனுடைய இரண்டாவது சீசனுக்கும் பார்வையாளர்களை மிகுந்த வரவேற்பு அளித்து வந்தனர். தற்போது இந்நிகழ்ச்சியும் விரைவில் முடிவடையவுள்ளது. 

நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியை முன்னிட்டு அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதனால் இரண்டாவது சீசனில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

இந்த சீசனின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் குக் வித் கோமாளிக்கு குட் பை சொல்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் "இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாக தெரியாமல் குடும்பத்துடன் சேர்ந்து சமைப்பது போல இருந்தது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். இந்நிகழ்ச்சி தொடர்பான என்னுடைய நினைவலைகள் எப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிறைந்திருக்கும்".

"பலரும் பங்கேற்க ஆசைப்படும் இந்நிகழ்ச்சி என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்பதை நெஞ்சம் ஏற்க மறுக்கிறது. எங்கு இருந்தாலும், எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் இந்நிகழ்ச்சிக் குழுவுடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன். இங்கு கிடைத்த சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நல்ல திறமைசாலிகள். அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் வெற்றியும் கிடைக்க நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இது  ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சிக் குழுவினரையும் சேரும்". 

"இங்கு கிடைத்த அனைவருமே சிறப்பானவர்கள். பல்வேறு தருணங்களில் என்னிடம் அன்பாகவும், உறுதுணையாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு அன்றி தெரிவிக்க வாழ்த்துக்கள் இல்லை. எனினும் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து வரவேற்பு பெற்ற் அனைவருக்கும் வெற்றியும் மக்களின் அரவணைப்பும் தொடரும் என நம்புகிறேன்".

"நிச்சயமாக ஒருவரை பற்றி குறிப்பிட வேண்டும். அவர் ஷிவாங்கி. அவரால் தான் என்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்பாக இயங்க முடிந்தது. அவர் தான் என்னுள் இருந்த விளையாட்டுத் தனத்தை வெளியே கொண்டு வந்தார். என்னிடம் எப்போதும் “என்னை மிஸ் செய்வீங்களா” என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நிச்சயமாக அவரை எப்போதும் மிஸ் செய்வேன் என்பது உறுதி" என்று அஸ்வின் உருக்கமாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web