நான் இன்று பலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் எதிர்கொண்ட கடுமையான
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமந்தா வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்து மீண்டுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததும் மன அழுத்தத்துக்கு உள்ளானார். தசை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளான அவர் சினிமாவில் நடிக்காமல் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டார். இப்போது மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதுதான் மனிதர்கள் பலமானவர்களாக மாறுகிறார்கள். அடிமட்டத்திற்கு சென்றுவிட்ட பிறகுதான் நமது பலம் என்ன என்பது நமக்குத் தெரியும். அடிமட்ட நிலைக்கு விழுந்துவிட்ட பிறகு எந்த பெரிய பிரச்சினை வந்தாலும் அது ஒரு பிரச்சினையாகவே தெரியாது. அப்படி அடிமட்டத்திற்கு சென்று கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள். நான் இன்று பலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் எதிர்கொண்ட கடுமையான நிலைமைகள் தான். காரணம். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னால் அது அவர்களின் நல்லதுக்குதான் என்று நான் அடிக்கடி சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.