என்னை விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன்: விஜய் ஆண்டனி!
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹிட்லர் பட குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். விஜய் ஆண்டனியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்துகள். நடிகர் விஜய்யின் தவெக கட்சி நிகழ்வுகளுக்கு, விஜய் தரப்பில் இசை அமைத்து கொடுக்க வாய்ப்பு கேட்டால் செய்து தருவேன். நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை.” என்று கூறினார்.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் அக். 27-ம் தேதி நடத்துகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஏற்கெனவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், விஜய் கட்சிக்கு பாடல்கள் கேட்டால் இசையமைப்பேன் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.