சாரி கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்..! மன்னிப்பு கேட்ட இர்பான்..!

பிரபல யூட்யூபரான இர்பான் தனது இர்ஃபான்ஸ் வியூ சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோரை எம்புரான் படத்திற்காக பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தார். அப்போது மோகன்லாலிடம் அவர் கேட்ட கேள்விகள் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
இந்த நிலையில் தான் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது காரில் மனைவியுடன் சென்ற இர்ஃபான் காரில் இருந்து கொண்டே சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள், பணம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இதனை பார்த்த ஏராளமானோர் அவரது காருக்கு அருகே சென்று முண்டி அடித்துக் கொண்டு உதவிகளை வாங்கினார்கள். அப்போது கடும் கோபமான இர்ஃபான் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு கொடுக்கத்தானே வந்திருக்கிறோம் என கோபமாக பேசினார். ஆனால் அந்த வீடியோவை அவரது யூட்யூப் சேனலில் எடிட் செய்யாமல் வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் கடும் கண்டனங்கள் குவிந்தது. குறிப்பாக தவ்ஹீத் ஜமாத், பிரபல தொகுப்பாளரான விஜே பார்வதி உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.
குறிப்பாக,"இர்ஃபான் பெரிய ஜமீன் பரம்பரை.. சார் காரில் உட்கார்ந்து கொண்டுதான் மக்களுக்கு சேவை வழங்குவாரு..தன்னிடம் காசு இருக்கிறது என்பதை வந்து.. எப்படி எல்லாம் கேவலமாக.. இங்க தான் அவனது மூளை வெளிப்படுது.. இந்த மாதிரி சீப் மெண்டாலிட்டி உள்ளவர்களை பற்றி பெரிய லிஸ்டே இருக்கிறது.. இவனுங்களையா நம்ம வந்து புரேமோட் பண்றது.. " என விஜே பார்வதி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதேபோல பலரும் இர்ஃபானை விமர்சித்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர்,"முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் என் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் அப்போதைய சூழலை கையாள தெரியவில்லை. அதன் காரணமாக திணறிப் போய் சில விஷயங்களை தவறாக செய்துவிட்டேன். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என சிலர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. நானும் கஷ்டப்பட்ட இடத்திலிருந்து வந்தவன் தான். என்னுடைய விஷயங்களுக்காக நான் மனம் வருந்துகிறேன். நான் மக்களிடம் முறை தவறி நடந்து கொண்டதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் அப்படி நடந்து கொண்டது பலரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மனைவி அவர்களால் திடீரென அசவுரியகரமாக உணர்ந்தார். அதன் காரணமாகவே கொஞ்சம் டென்ஷனாகி விட்டேன்" என கூறியுள்ளார். எத்தனை தடவை தான் மன்னிப்பு கேட்பார் இர்பான்.. படுத்தே விட்டார் என பலரும் இர்பானின் விளக்கத்துக்கு விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.