சன் டி.வி-யில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு போகிறாரா ராதிகா ?

radhika switches over to vijay tv from sun tv
 
1

நீண்ட நாட்களாக தொலைக்காட்சி துறையை விட்டு விலகி இருந்த ராதிகா, தற்போது விஜய் டி.வி-க்காக புதிய சீரியலை தயாரிக்கும் பணிகளில் களமிறங்கியுள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் ராதிகா. அவருடைய சித்தி தொடர் ஒளிப்பரப்பான பிறகு தான், தொலைக்காட்சி என்பது பெண்களின் ஊடகம் என்பது பலருக்கும் புரிந்தது. அதுவரை குடும்பங்களை மையப்படுத்திய, தனிப்பட்ட கதாநாயகனை மையப்படுத்திய கதைகள் தான் சீரியலாக தயாராகி வந்தன.

ஆனால் ராதிகாவின் ‘சித்தி’ தொடர், பெண்ணை மையப்படுத்தி தான் செயல்படும். இதற்கு பிறகு தான் வாழ்க்கை, கோலங்கள், திருமதி செல்வம், தெய்வமகள் போன்ற சீரியல்கள் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்துமே பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து ஒளிப்பரப்பான தொடர்களாகும். 

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ராதிகா ‘சித்தி சீசன் 2’ என்கிற சீரியலில் நடித்தார். அது படுதோல்வி அடைந்தது. பிரைம் டைமில் ஒளிப்பரப்பான போதிலும் டி.ஆர்.பி-யில் பலத்த அடி வாங்கியது. இதையடுத்து அந்த தொடரை விட்டு விலகிய ராதிகா, சினிமாவில் கவனம் செலுத்த துவங்கினார்.

தற்போது ராதிகா மீண்டும் சீரியல் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். அவருடைய ராடன் மீடியா தயாரிக்கும் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த தொடருக்கு ‘கிழக்கு வாசல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்தொடரின் நாயகனாக சஞ்சீவ் நடிக்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சஞ்சீவ் மீண்டும் சின்னத்திரைக்கு ‘கிழக்கு வாசல்’ தொடர் மூலம் திரும்பியுள்ளார். இதனாலேயே இத்தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆனந்த் பாபு, ரேஷ்மா, ’அயலி’ புகழ் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சீரியலுக்கான ஷூட்டிங் துவங்கியுள்ளது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ கதை பாணியில் இந்த தொடர் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சீரியலை மனோஜ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். முன்னதாக இவர் மவுனராகம் சீசன் 2 சீரியலை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web