‘லியோ’ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியதாக பரவும் செய்தி உண்மையா ?
‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் கடந்த 3-ம் தேதி வெளியாகியது. தற்போது இப்படத்தின் டைட்டில் ப்ரோமா வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் தான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
‘லியோ’ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டார் என்று பேச்சு கிளம்பியது. இப்படம் தொடர்பான ரீட்வீட்டுகள், லைக்குளை நீக்கிவிட்டார் த்ரிஷா. அதை பாரத்துவிட்டு தான் த்ரிஷா விலகிவிட்டார் என்றார்கள். ஆனால் ரீட்வீட்டுகள், லைக்குளை நீக்குவது த்ரிஷாவின் வழக்கம் என்பது தெரிந்து அமைதியானார்கள். இதையடுத்து அந்த புகைப்படம் வைரலானது.
சென்னை விமான நிலையத்தில் த்ரிஷா இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. லியோவில் இருந்து விலகியதால் தான் காஷ்மீருக்கு சென்ற த்ரிஷா சென்னை திரும்பிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பேசினார்கள். த்ரிஷா அப்படிப்பட்ட ஆள் இல்லையே என்று விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்தது.
‘லியோ’ படத்தின் ஹீரோயின் த்ரிஷா தான். அவர் விஜய் மற்றும் லியோ படக்குழுவுடன் காஷ்மீரில் இருக்கிறார். சென்னை விமான நிலைய புகைப்படம் பழையது. தற்போது எடுக்கப்பட்டது அல்ல. அதனால் த்ரிஷாவை பற்றி தீயாக பரவிய தகவல் வெறும் வதந்தி தான். 14 ஆண்டுகள் கழித்து ராசியான ஜோடியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் வதந்தி பரவி அவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.