சமுத்திரகனி நடிக்கும் படத்தில் இந்த டிவி நடிகை தான் ஹீரோயினா..?

 
சமுத்திரகனி நடிக்கும் படத்தில் இந்த டிவி நடிகை தான் ஹீரோயினா..?

பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

அண்மையில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அவர் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்றன. இதனால் அங்கும் அவர் முக்கிய நடிகராக மாறிவிட்டார்.

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஃபிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி வரும் படம் ‘ரைட்டர்’. இந்த படத்தில் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல அந்த போஸ்டரில் இடம்பெற்ற நடிகர் சமுத்திரகனியின் புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.

தற்போது இந்த படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான மகேஸ்வரி நடித்து வரும் விபரம் தெரியவந்துள்ளது. அவர் ரைட்டர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தமிழில் வெளியான கந்தசாமி படத்தில் ஸ்ரேயாவுக்கு தோழியாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் மகேஸ்வரி நடித்துள்ளார். சினிமாவில் கவனம் பெற முயன்று வரும் மகேஸ்வரிக்கு ரைட்டர் படம் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web