இறந்துபோன துணை நடிகருக்கு இறுதி மரியாதை செய்த டி. இமான்..!!
தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும்; தன்னுடைய முகத்தை அந்த பெரிய திரையில் பார்த்துவிட வேண்டும் என்கிற கனவுடன் தினமும் சென்னையை நோக்கி வருபவர்கள் ஏராளம். அவ்வாறு சினிமாவை நம்பி வந்தவர்கள், பல ஆண்டுகளாக வாய்ப்பு தேடி அலைந்து, எதுவும் கிடைக்காமல் காணாமல் போன பலர் இன்றும் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் பிரபு. ஆனால் இவர் குறிப்பிட்ட சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் வந்துபோனார். ரஜினிகாந்த், வடிவேலு, தனுஷ், ஆர்த்தி போன்ற பிரபல நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். எனினும், அவரால் வெற்றிபெற்ற நடிகனாக சினிமாவில் வலம் வர முடியவில்லை. சினிமாவை நம்பி இருந்துவிட்டதால், வேறு எங்கேயும் வேலைக்கு போக முடியவில்லை.
யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தபோது, பிரபுவுக்கு அந்த துயரச் சம்பவம் நடந்தது. வெறும் 48 வயதான பிரபு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், எதுவும் பலனிக்கவில்லை. புற்றுநோய் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி, முடிவில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதை அறிந்த சக துணை நடிகர்கள், பிரபுவுக்கு இறுதிச் சடங்கை முறைப்படி செய்ய நிதி திரட்டியுள்ளனர். இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் இசையமைப்பாளர் டி. இமான் இறுதிச் சடங்குக்கான செலவை தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார். அத்தோடு நிற்காமல் சடங்கு முறைகளை தானே செய்து, பிரபுவின் சிதைக்கு எரியூட்டியுள்ளார்.
இதற்காக பல தரப்பினர் டி. இமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயத்தில் பிரபு போல ஆதரவின்றி இருக்கும் பல துணை நடிகர்களுக்கு, வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.