’விருமாண்டி’போஸ்டரை காப்பி செய்து ‘விக்ரம்’ படத்துக்கு ஒட்டிய கமல்..!

 
விருமாண்டி மற்றும் விக்ரம் பட போஸ்டர்கள்

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ‘விருமாண்டி’ படத்தின் போஸ்டர் பாணியில், அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் படம் ‘விக்ரம்’. தேனி மாவட்டத்தை பின்னணியாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமலுக்கு இணையான கதாபாத்திரங்களில் ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடிக்கின்றனர். இவர்களில் யார் வில்லன் என்கிற விபரம் தெரியவில்லை. ஆனால் இந்த காம்போவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிளாக் & ஒயிட் நிறத்தில் காட்சியளிக்கும் போஸ்டர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோருடைய போர்ட்ரைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதை பார்ப்பதற்கு விருமாண்டி பட போஸ்டர் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் விருமாண்டி போஸ்டரை விட விக்ரம் பட போஸ்டர் ஏற்படுத்தும் தாக்கம் குறைவு தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.

மேலும், ட்விட்டரில் இந்த போஸ்டரை வெளியிட்ட கமல், “யுத்தத்தில் அதோ அதோ விடியுது,,, சத்தத்தால் அராஜகம் அழியும்,,, ரத்தத்தால் அதோ தலை உருளுது... சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது” என பதிவிட்டு இருந்தார். இது விக்ரம் படத்தில் இடம்பெறும் பாடல் என தெரியவந்துள்ளது.

வரிகள் முழுக்க வன்முறையாக இருப்பதால் விக்ரம் படம் ‘தேவர்மகன்’ மற்றும் ‘விருமாண்டி’ படங்களை போன்ற பின்னணியில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என ரசிகர்கள் பலர் கூறுகின்றனர். ஒருவேளை இது ‘தேவர்மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்பது சிலருடைய கருத்தாக உள்ளது.
 

From Around the web