அப்துல் கலாமின் பசுமைக் காவலராக வலம் வந்தவர்- கமல்ஹாசன் உருக்கம்..!

 
அப்துல் கலாமின் பசுமைக் காவலராக வலம் வந்தவர்- கமல்ஹாசன் உருக்கம்..!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இளவலாய், பசுமைக் காவலராய் வலம் வந்தவர் நடிகர் விவேக் என்று அவருடைய மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். அவருடைய திடீர் மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பலதரப்பட்ட முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்துள்ளார். ஆனால் அவர் இணைந்து நடிக்காத ஒரே நடிகராக இருந்தார் கமல்ஹாசன். அதை பலமுறை பல மேடைகளில், கமல் முன்னிலையிலே குறிப்பிட்டு சொல்லியுள்ளார் விவேக்.

ஆனால் அந்த ஆசையும் ஒருநாள் நிறைவேறியது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த ‘இந்தியன் 2’ படத்தில் முதன்முதலாக கமலுடன் இணைந்து நடிக்க இருந்தார் விவேக். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக ‘இந்தியன் 2’ படத்தின் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் அதற்குள் நடிகர் விவேக் உயிரிழந்துள்ளது படக்குழுவினருக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web