காந்தாரா 2 படப்பிடிப்பு அப்டேட்..!! எப்போது தெரியுமா..??

கன்னட சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் ஹொம்பாலே ஃப்லிம்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் மாதம் வெளியிட்ட படம் ‘காந்தாரா’. நாடு முழுவதும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு குவிந்தது. வெறும் சில கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒட்டுமொத்தமாக ரூ. 400 கோடி வரை வசூல் செய்தது.
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கன்னடத்தில் நேரடியாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
காந்தாரா படத்தின் முன்கதை பின்னணியில், அதனுடைய இரண்டாவது பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வந்ததை அடுத்து, பூதகோலா நடக்கும் கோயிலுக்கு சென்று கிராம தேவதையிடம் ரிஷப் ஷெட்டி ஆசி பெற்றார். அதுதொடர்பான வீடியோ வெளியானது.
இதன்மூலம் காந்தாரா இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பான் இந்தியா முறையில் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படம் காந்தாரா முதல் பாகத்துக்கு முந்தைய காலக்கட்டத்தின் பின்னணியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.