கவின் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிளடி பெக்கர்’!
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார். ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. இவர் அடுத்ததாக, ஜெயிலர் – 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில், இவரின் முதல் படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. அதில், நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
இது தொடர்பான ஜாலியான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நெல்சன், ரெடின், கவின், சிவபாலன் அமர்ந்திருக்க, ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் ரெடின், “நம்ம பையனுக்கு நம்ம பண்ணாம யாரு பண்ணுவா” என படத்தை தயாரிக்கும்படி நெல்சனிடம் கோருகிறார். தொடர்ந்து படத்தில் கவின் கதாபாத்திர தோற்றத்தை தயார் செய்து காட்டும்படி சொல்ல நீண்ட நேரமாக ஒப்பனை செய்யப்படுகிறது.
இறுதியில் யாசகம் பெறுபவர் தோற்றத்தில் கவின் வந்து நிற்க, படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்படுகிறது. இறுதியில், “அந்த விக், ட்ரெஸ், எல்லாத்தையும் எடுத்து வைங்க” என ரெடின் சொல்ல, ‘எதுக்கு?” என நெல்சன் கேட்கிறார். “ஒருவேள படம் முடிஞ்சு உனக்கு தேவப்படலாம்” என ஜாலியாக முடிகிறது வீடியோ.