உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு : கீர்த்தி பாண்டியன்..!

 
1
சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ படமும், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘கண்ணகி’ படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி பாண்டியன் மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்தார். அதில், “திருமணத்துக்கு பிறகு 2 பேருமே நடிப்பில் பிசியாகி விட்டோம். இப்போது நாங்கள் இருவரும் வீட்டுக்குள் இணைந்திருக்கும் நாட்கள் எத்தனை? என்று எண்ணி கொண்டிருக்கிறோம். அந்தளவு பட வேலையில் பிசியாக இருக்கிறோம்.

என்னை பற்றி நன்றாக புரிந்துகொண்டவர் அசோக். அதேவேளை எனக்கான மரியாதையும் அவர் தருகிறார். நடிப்பு சம்பந்தமாக எங்களுக்குள் இருக்கும் கருத்துகளை தைரியமாகவே பகிர்ந்துகொள்வோம்.

உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு. அப்படி பேசுவோரின் தரமற்ற எண்ணத்தை தான் இது வெளிக்காட்டுகிறது. சிறிய வயதில் எனது தோற்றத்துக்காக நிறைய கலாய்க்கப்பட்டு இருக்கிறேன். நான் குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் நான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்தேன்.

அந்த சமயங்களில் தன்னுடைய தோற்றத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன். ஆனால் இப்போது யோசித்துப்பார்த்தால், அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நான் எனக்காகவே பலமாகி இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

From Around the web