மகேஷ் பாபு படத்தில் நடிக்கும் கேஜிஎஃப்- 2 வில்லன் சஞ்சய் தத்..!

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு புதியதாக நடிக்கவுள்ள படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
1980-கள் மற்றும் 90-களில் கோலோச்சிய நடிகர்கள் பலர் தற்போதைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த டிரெண்ட் இந்தி நடிகர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும். இந்திப் படங்களில் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு, தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றனர்.
இதுபோன்ற நடிகர்கள் மூலம் வட இந்தியாவில் மார்கெட் கிடைப்பதால், தென்னிந்திய சினிமாதுறையினரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். கேஜிஎஃப் 2 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். இவருடைய மிரட்டலான கதாபாத்திரம் காரணமாக இந்தியளவில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதையடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தை த்ரீவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளார். பூஜா ஹெக்டே மற்றும் நபா நடேஷ் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.