என்னுடைய முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக "கொட்டுக்காளி" இருக்கும் - நடிகர் சூரி..!
காமெடி படங்களில் நடித்த சூரி முன்னணி நட்சத்திரங்களுடனும் காமெடியில் கலக்கியிருந்தார். அந்த வகையில் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்து இருந்தார்.
முதன்முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருந்தார். அன்று முதல் விடுதலை சூரி என்றே அவர் அழைக்கப்பட்டார். அதில் அவரது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கருடன் படத்தில் அசுர வேட்டை ஆடியிருந்தார். முற்றிலும் மாறுபட்ட ரீதியில் நட்பு ,துரோகம் இவற்றுக்கு இடையில் நியாயத்தின் பக்கம் நின்று போராடிய சூரியின் கருடன் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்தது.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி நடித்து வரும் கொட்டுக்காளி படம் குறித்து பகிர்ந்து உள்ளார். தற்போது சூரியின் இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
அதில் அவர் கூறுகையில், என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்.