கொரோ பாதிப்பால் இறுதிச்சடங்கு செய்ய முடியாது- தவிக்கும் கே.வி. ஆனந்த் குடும்பம்..!

 
கொரோ பாதிப்பால் இறுதிச்சடங்கு செய்ய முடியாது- தவிக்கும் கே.வி. ஆனந்த் குடும்பம்..!

மறைந்த கே.வி. ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவருடைய குடும்பத்தாரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே.வி. ஆனந்தின் மனைவி மற்றும் மகளுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி கே.வி. ஆனந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால் அவராகவே காரை எடுத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று அட்மிட்டான விபரங்கள் தெரியவந்துள்ளன. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்தது.

கே.வி. ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்ப முடியவில்லை. நேராக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான ஒரு அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு குளிர்சாதன வசதிகொண்ட கண்ணாடி பேழைக்குள் கே.வி. ஆனந்த் உடல் வைக்கப்பட்டது.

மின் மயானத்துக்கு செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டின் வாசலில் அவசர ஊர்தி சிறிது நேரம் நின்றது. அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் கே.வி. ஆனந்த் உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டது.
 

From Around the web