பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்..!!

 
1

மலையாள திரைத்துறையின் பழம்பெரும் நடிகர் மாமுக்கோயா காலமானார். அவருக்கு வயது 76. தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அவரது மரணத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றபோது மாமுக்கோயாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் வான்டூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 1946-ல் பிறந்த மாமுக்கோயா, ஆரம்ப நாட்களில் நாடக கலைஞராக நடித்து வந்துள்ளார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 1979-ல் நீலாம்பூர் பாலன் இயக்கி வெளிவந்த அன்யாருடே பூமி அவர் நடித்த முதல் படமாகும். 

காமெடி நடிகராக பிரபலமடைந்த அவர் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். 

மாமுக்கோயா - சுஹாரா தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கடைசியாக அவரது நடிப்பில் சுலைகா மன்சில் படம் வெளியாகி இருந்தது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பழம்பெரும் நடிகர் இன்னொசென்ட் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் அடுத்தடுத்து மூத்த நடிகர்களின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web