தோனி தயாரிப்பில் வெளியான எல்.ஜி.எம் பட டிரெய்லர்..!!
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி சேர்ந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற பெயரில் துவங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தமிழில் தயாராகியுள்ளது.
அதுதான் எல்.ஜி.எம் (Lets Get Married) படம்.
காதல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும் லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். படத்தில் யோகி பாபு மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு, நிறைவடைந்துள்ளது. அதை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எல்.ஜி.எம் பட டிரெய்லர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
ரோமேண்டிக் காமெடி ஜான்ராவில் உருவாகியுள்ள டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து சமூகவலைதளங்களில் படத்தின் டிரெய்லர் டிரெண்ட் அடித்துள்ளது. முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தோனி பல்வேறு விஷயங்களை மேடையில் பேசினார்.
எனது டெஸ்ட் அறிமுகம் சென்னை தான். எனது அதிகப்பட்ச ஸ்கோரை நான் பதிவு செய்துள்ளது சென்னையில் தான். ஐ.பி.எல் போட்டிகளுக்கு பிறகு என்னை தமிழகம் தத்தெடுத்து கொண்டது. இரண்டு பெண்களுக்கு இடையே மாட்டித் தவிக்கும் இளைஞரின் கதை தான் எல்.ஜி.எம். படத்தில் ஹரீஷ் கல்யாண் சிறப்பாகவே நடித்துள்ளார் என்று மகேந்திர சிங் தோனி பேசினார்.