கமலுக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் கைக்கோர்க்கும் லோகேஷ் கனகராஜ்..!
 

 
கமலுக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் கைக்கோர்க்கும் லோகேஷ் கனகராஜ்..!

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்குவது உறுதியான நிலையில், அதில் யார் ஹீரோ என்கிற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் பட வேலைகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிஸியாகிவிட்டார். தேனி மாவட்டத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் வில்லனாக நடிக்க மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கான தகவல்கள் குறித்து தெரியவந்துள்ளன. அடுத்ததாக அவர் தெலுங்கு படத்தை இயக்குவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதில் ஹீரோவாக பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அந்த படத்தில் நடிப்பதற்கு மகேஷ் பாபு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web