லக்கி பாஸ்கர் 2ம் பாகம் நிச்சயமாக வரும்...'சூர்யா 46' இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

தனுஷின் வாத்தியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் 'லக்கி பாஸ்கர்' படத்தினை இயக்கி பாராட்டுக்களை அள்ளினார்வெங்கி அட்லுரி. இவர் தற்போது அளித்து பேட்டி ஒன்றில் நிச்சயமாக ' லக்கி பாஸ்கர் 2 ' வரும் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான ஸ்கிரிப்ட் இன்னமும் தயாராகவில்லை. அவரவர் படங்களில் நானும், துல்கர் சல்மானும் பிசியாக இருக்கிறோம்.
சிறிது காலம் கழித்து 'லக்கி பாஸ்கர் 2' படத்திற்காக இணைவோம். நிச்சயமாக நடக்கும். இவ்வாறு இயக்குனர் வெங்கி அட்லுரி கூறியுள்ளார். அத்துடன் வாத்தி தனிக்கதையாக இருக்க வேண்டுமென தனுஷ் விரும்பினார். அதுனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது எனவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லுரி. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'லக்கி பாஸ்கர்' படம் வெளியானது.
நாக வம்சி தயாரிப்பில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் உள்ளிட்ட பலரும் இணைத்து நடித்திருந்தனர். தெலுங்கு மொழியில் உருவான இப்படம் பான் இந்திய மொழிகளில் ரிலீசாகி அமோகமான வரவேற்பினை பெற்றிருந்தது. மும்பையை கதைக்களமாக கொண்டு வங்கி கொள்ளை பின்னணியில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது 'லக்கி பாஸ்கர்' வசூலை குவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ஆனால் இப்படம் எப்போது துவங்கும் என்பது குறித்தான எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. வெங்கி அட்லுரி தற்போது சூர்யா படத்தினை இயக்கி வருகிறார். யாரும் எதிர்பாராத விதமாக இந்த கூட்டணி இணைந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
' சூர்யா 46 ' படம் நல்ல குடும்ப படமாக இருக்கும் என இயக்குனர் வெங்கி அட்லுரி கூறியுள்ளார். லக்கி பாஸ்கர் படத்தினை தொடர்ந்து நிறைய பயோபிக் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் பேமிலி ஆடியன்ஸ்களை கவரும் கதைக்களத்தையே தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக, அதோடு எமோஷனலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கு படமாகவும் 'சூர்யா 46' இருக்கும் எனவும் வெங்கி அட்லுரி கூறியுள்ளார். அத்துடன் கஜினி சஞ்சய் ராமசாமி மாதிரி சூர்யாவின் ரோல் இப்படத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரேமலு நாயகி மமிதா பைஜு முக்கியமான ரோலில் சூர்யா 46 படத்தில் நடிக்கிறார். மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.