பொன்னியின் செல்வன் 3-ம் பாகம், 4-பாகம் எடுக்கும் திட்டத்தில் லைகா..!!
 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, மூன்று மற்றும் நான்காம் பாகங்களை எடுக்க லைகா நிறுவனம் மணிரத்னத்துடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
ponniyin selvan

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் 60 ஆண்டுக் கனவாகும். எம்.ஜி.ஆர், பாரதிராஜா, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கமல்ஹாசன் என பலரும் இந்நாவலை திரைப்படமாக எடுக்க முயன்று, முடியாமல் போனது.

இதில் கமல்ஹாசன் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 20 எபிசோடுகள் கொண்ட குறுந்தொடராக எடுக்க முயன்றார். அப்போது டி.டி ஒளிபரப்பு சேவை மட்டுமே இருந்தது. மேலும் அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை.

அதனால் அம்முடிவை கைவிட்டுவிட்டார். இயக்குநர் மணிரத்னம் 2010-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். விஜய், மகேஷ் பாபு, அனுஷ்கா, ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் அதுவும் நடக்காமல் போனது. இந்நிலையில் 2020-ம் ஆண்டு இதற்கான பணிகளை துவங்கிய, கடுமையான கொரோனா காலக்கட்டத்துக்கு இடையில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கி சாதனை படைத்தார் மணிரத்னம். மொத்தம் 6 பாகங்கள் கொண்ட நாவலை 2 பாகங்கள் கொண்ட படமாக எடுத்து முடித்துள்ளார்.

அதில் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி சரித்திர வெற்றி பெற்றது. இப்போது இதனுடைய இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. பொன்னியின் செல்வன் நாவல் ராஜ ராஜசோழனின் பட்டாப்பிசேகத்துடன் முடிந்துவிடும். ஆனால் தனக்கு வந்த அரச மணிமுடியை, சித்தப்பா மதுராந்தகனுக்கு சூட்டிவிடுவார் ராஜ ராஜசோழன். 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதை மற்றும் சோழக் குலத்தின் மீது மக்களுக்கு இருக்கும் பிணைப்பு ஆகியவற்றை புரிந்துகொண்டுள்ள லைகா, பொன்னியின் செல்வன் 3 மற்றும் 4-ம் பாகங்களை இயக்கச் சொல்லி மணிரத்னத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டிய பின், என்ன நடந்தது? எப்போது அருண்மொழிவர்மன் என்கிற ராஜ ராஜ சோழன் பட்டத்துக்கு வந்தான்? எப்போது தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டினான்? எப்படி கடாரம் கொண்டான் என்கிற பெயரை பெற்றான்? என்கிற ரீதியில் பொன்னியின் செல்வன் 3 மற்றும் 4 பாகங்கள் உருவாக்கப்படவுள்ளன.

வெறும் ராஜ ராஜ சோழன் மட்டுமில்லாமல், அவருடைய மகன் ராஜேந்திர சோழன், மகள் குந்தவை உள்ளிட்டோரை மையப்படுத்தியும் படமெடுக்க லைகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web