எண்ணெய் கழிவுகளை நேரில் சென்று ஆய்வு செய்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன்!

 
1

மிக்ஜாம் புயல் காரணமாக எண்ணூர் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி அந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாக படிந்தது என்பதும் இதனால் மழை நீரோடு கச்சா எண்ணெய் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

இதனை அடுத்து எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டன் கணக்கில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் படகில் சென்று அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த இடத்திற்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தை விட இம்முறை பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான ஒரு அறிகுறியும் இங்கு இல்லை. எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இங்குள்ள கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை, மீனவர்கள் தான் அகற்றி வருகின்றனர்.

எண்ணெய் கழிவை அகற்ற பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல். உயிர்க்கொல்லி வேலைகள் செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும் போது நிவாரணம், போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பழி போட்டு வரும் நிலை மாற வேண்டும். எண்ணெய் கழிவு கடவுள் கொடுத்த வரம் அல்ல. எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் தான் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்,


 


 

From Around the web