#BIG NEWS : நடிகர் இன்னொசென்ட் தொடர்ந்து கவலைக்கிடம்- ரசிகர்கள் வேண்டுதல்..!!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் இன்னொசென்டின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல குணச்சித்திர நடிகரான இன்னொசென்ட், 2014 முதல் 2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்த போது ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் நகைச்சவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரள அரசின் மாநில விருதுகளை பலமுறை வென்றுள்ள அவர், மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு இன்னொசென்டுக்கு தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற்றார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னொசென்டுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புற்றுநோய் பாதிப்பு உடலின் பல்வேறு பகுதிகளில் பரவி விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு , தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், தொடர்ந்து இன்னொசென்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.